Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக்.15), கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அப்போது கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அப்படிச் சொல்லிவிட்டு தவெகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி?. அது சந்தேகத்தை எழுப்புகிறது.
அதேபோல், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி. உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி சில விசயங்களை குறிப்பில் இருந்து நீக்கும்படியும் கோரினார். இதனால், இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், காவல் துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை செய்ததுடன், உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
அமைதியாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர் நீங்க கூறிய விசயங்களை நீக்குவேன் என்றும் கூறினார்.
முதல்வர் அறிக்கையில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை சுட்டி காட்டலாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
எனினும், அவையில் தொடர்ந்து தரையில் அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து, அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை முன்னிட்டு, சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b