Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று (அக் 14) தொடங்கியது.
நேற்றைய கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (அக் 15) பேரவையில் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து இந்த நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் வகையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதனையொட்டி சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் கைகளில் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், நாமக்கல் கிட்னி திருட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அதிமுகவினர் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனும் கூட கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக எம் எல் ஏ.க்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்துவந்திருந்ததை சுட்டிக்காட்டி, “உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் வந்துவிட்டதா?” என்று சபாநாயகர் அப்பாவு கிண்டல் தொனியில் பேசினார்.
அதன் நீட்சியாக அமைச்சர் ரகுபதி கூறுகையில்,
அது பற்றி நான் விளக்கம் சொல்கிறேன்.
சிறைவாசிகளுக்கு எல்லாம் ஓர் அடையாளம் தருவார்கள் அல்லவா?. அதுபோல் அதிமுக உறுப்பினர்கள் ஓர் அடையாளத்தோடு வந்துள்ளனர்.
மற்றபடி, நான் அவர்களை தவறாகச் சொல்லவில்லை என்றார்.
இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b