Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 54-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 17-ம் தேதி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்
இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட `அ.தி.மு.க.' 17-ந்தேதி வெள்ளிக் கிழமையன்று 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும் அவர் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
அதேபோல், 54-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கட்சி கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும் கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்க வேண்டும். பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கட்சியின் தொடக்க நாளை விழாக் கோலத்துடன் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b