Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று
(அக் 15) 2ஆம் நாள் மழைக்கால சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது.
நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்துபோனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன். உறவுகளை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த செப்.27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியைக் கோரி இருந்தார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை.
செப்.25-ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தைப் பகுதியில் அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை.
பின்பு, செப். 25 அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுசாமிபுரத்தில் 27-ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரினார். மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவு காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் மொத்தம் 606 பேர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தில் கூட்டம் நடத்த மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சியின் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால், கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினார்.
செப். 27-ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார்.
அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கடந்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b