Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 15 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் என்பது, அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடு ஆகும். பழனி முருகன் கோவிலுக்கு விஷேச நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
அந்த வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற அக்டோபர் 22ம் தேதி உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. அன்று முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு நடைபெறவுள்ளது.
6-ம் நாளான அக்டோபர் 27ம் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி, மாலையில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்ன குமாரசுவாமி
வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 28ம் தேதி முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b