அக்டோபர் 15, இன்று உலக மாணவர்கள் தினம் - இந்தியாவின் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமுக்கு மரியாதை
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாள், உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2010ஆம் ஆண்டில்
அக்டோபர் 15, இன்று உலக மாணவர்கள் தினம் - இந்தியாவின் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமுக்கு மரியாதை


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாள், உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

2010ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அப்துல் கலாமின் கல்விக்கான பங்களிப்புகள் மற்றும் மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பைப் போற்றும் வகையில் இந்த நாளை உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.

வரலாறு மற்றும் முக்கியத்துவம்,

ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை அடைந்த அப்துல் கலாம், கல்விக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்தாலும், மாணவர்களுக்கு கற்பிப்பதையே அவர் பெரிதும் விரும்பினார்.

கலாம், மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என உறுதியாக நம்பினார். அவர்களிடம் பேசுவதிலும், கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். கனவு காணுங்கள், அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த நாள், சமூகத்தில் மாணவர்கள் ஆற்றும் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. மாணவர்கள் தங்கள் கனவுகளைத் தொடரவும், சிறந்து விளங்கவும் இது ஊக்கமளிக்கிறது. அவர்கள்தான் எதிர்கால உலகின் தலைவர்கள் மற்றும் மாற்றங்களை உருவாக்கும் சக்தி என்பதை இந்த நாள் எடுத்துரைக்கிறது.

கலாமின் பொன்மொழிகள்,

மாணவர்களுக்கு உத்வேகமளிக்கும் பல பொன்மொழிகளை அப்துல் கலாம் கூறியிருக்கிறார். அவற்றில் சில:

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.

கனவு என்பது நீ உறங்கும்போது வருவதல்ல. அது உன்னை உறங்கவிடாமல் செய்வது.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

உலக மாணவர்கள் தினம், அப்துல் கலாமின் உயர்ந்த நோக்கங்களையும், கனவுகளையும் நினைவுகூர்கிறது.

இது மாணவர்களிடையே கல்வி, கடின உழைப்பு, மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மாணவர் சக்தியை நம்பி, ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கலாமின் கனவை நிறைவேற்றுவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

Hindusthan Samachar / JANAKI RAM