Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனம் மூடல், உரிமையாளர் கைது, இதர மருந்துகள் குறித்த ஆய்வு என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது. இந்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக கோல்ட்ரிஃப்(Coldrif), ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்(Respifresh TR), ரீ லைஃப்(ReLife) ஆகிய 3 இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்'(Coldrif), குஜராத்தில் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்'(Respifresh TR) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'ரீ லைஃப்'(ReLife) ஆகிய இருமல் மருந்துகளில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மருந்துகள் ஏதேனும் நாடுகளில் கண்டறியப்பட்டால் உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதுடன் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இது போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்றும் பொதுவாக ஐந்து வயதுக்குள்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM