Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டீசல்' படம் மூலம் ஆக்ஷன் ஜானரிலும் அடியெடுத்து வைக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
அவரது கரியரில் மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'டீசல்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து கொண்டதாவது,
தங்கத்தை விடவும் பெட்ரோல் -டீசல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது.
குறிப்பாக, பிளாக் கோல்ட் எனப்படும் கச்சா எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வளம். நாம் அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால், அதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி அரிதாகவே யோசிப்போம். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இந்த படத்தை அர்த்தத்தோடும் நோக்கத்தோடும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறோம்.
பிசியாக உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்துவது சவாலானதாகவும் அதேசமயம் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இந்த கதைக்கு பின்னால் செய்திருக்கக் கூடிய ஆராய்ச்சியும் தகவல்களும் என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது. அவருடைய திரைக்கதை ஆழம் எப்படி என்னை வியப்புக்குள்ளாக்கியதோ அது போலவே ரசிகர்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன்.
இந்த படம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு சவாலானதாக இருந்தது. வசனம் பேசுவதில் இருந்து பாடல்கள், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிற்கும் கடுமையான உழைப்பு கொடுத்து இருக்கிறேன். இந்த படத்தின் மெசேஜும் ரொம்பவே திருப்தியாக வந்துள்ளது.
ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்கள் என் நடிப்பை விரும்பினார்கள் என்றால் இன்னும் இது போன்று பல ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
தீபாவளி பண்டிகை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பல பெரிய படங்களை இந்த பண்டிகைக்கு பார்த்து கொண்டாடியிருக்கிறேன். ஆனால், இந்த முறை என்னுடைய படமே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாகிறது என்பது புது அனுபவமாக உள்ளது.
இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. எங்களுடைய உழைப்பை ரசிகர்கள் நிச்சயம் மதிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
Hindusthan Samachar / Durai.J