Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்புப் பகுதியில் நாய்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பில் வசிக்கும் பெண் காவலர் ஒருவரும் அவரது கணவரும் சேர்ந்து இந்தச் செயலை செய்ததாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பில் பெண் காவலர் ஷீபா மற்றும் அவரது கணவர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் மற்றும் நாய்க் குட்டிகளை கொடூரமான முறையில் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 2 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில், நாய்கள் குச்சியால் தாக்கப்பட்டு, அவற்றின் சடலங்கள் ஒரு சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாய்கள் நல ஆர்வலர் எம். வி. நிக்னேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிசிடிவி ஆதாரங்கள்
சம்பவம் நடந்ததற்கான சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை விலங்குகள் நல ஆர்வலர் சேகரித்து வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சிகளில், ஒரு நாய் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடப்பதும், பின்னர் அந்தக் காவலரின் கணவர் நாய்களை அடித்துக் கொன்று கால்வாயில் வீசுவதும் பதிவாகியுள்ளது. இந்தச் செயல் தொடர்ச்சியாக சில மாதங்களாக நடைபெற்றுள்ளது
விலங்குகள் நல வாரியம் புகார்
எம். வி. நிக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாய்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதல், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Cruelty to Animals Act, 1960) கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் கொடூரச் செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரும் சின்னத்திரை நடிகையுமான சந்தியா வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ