Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)
கோவையைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் கோவைக்கு வந்து தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
2 புதிய கட்டடங்கள், பழைய கட்டடங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் ஆகியவை இங்கு செயல்பட்டு வருகின்றன. பல்வேறு முக்கிய மருத்துவங்களுக்கான அதிநவீன கருவிகள் இங்கு உள்ளன.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உடன் இருக்கக் கூடிய உறவினர்கள் பலர் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இரவு நேரங்களில் தங்குவது உண்டு.
இந்நிலையில் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மேலும் மருத்துவமனை வார்டுக்குள்ளும் போதை ஆசாமிகள் உலா வருவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் சி.சி.டி.வி வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.
இதில் பெண்கள் சிகிச்சை பெறும் வார்டில் ஒன்றில் போதை ஆசாமி நேராக செவிலியரிடம் பேசிவிட்டு, அவர் வெளியே போக அறிவுறுத்திய நிலையிலும் அவர் அதை பொருட்படுத்தாமல் சிகிச்சை பெறுவோர் வாடுக்குள் நுழைகிறார் அந்த போதை ஆசாமி.
அப்போது அச்சம் அடைந்த அந்த செவிலியர் பின்னோக்கி செல்கிறார். மேலும் உள்ளே இருக்க கூடிய மற்றொரு நபரை சந்தித்து விட்டு அந்த ஆசாமி வெளியேறுகிறார். அங்கு உள்ள பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் அதில் ஒருவரை பிடித்த போது, கையில் ஆயுதத்துடன் இருந்து உள்ளார். இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது .
கோவை மாவட்ட அரசு மருத்துவமனையிலேயே போதை ஆசாமிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாகவும், காவல் துறையினரிடம் தெரிவித்தால் அவர்களை கடும் நடவடிக்கை எடுக்காமல், மிரட்டி விட்டு அனுப்பி விடுவதாகவும், சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாததால் மீண்டும், மீண்டும் அவர்கள் மருத்துவமனைக்குள் இதே போல உலா வந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் மேலும் அச்சமூட்டும் வகையில் நடந்து கொள்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்கு உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆயுதங்களுடன் உள்ளே வரும் போதை ஆசாமிகளின் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan