Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழா நாளை
(அக் 17) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
ஆலமரம் போல தழைத்து, தரணியெங்கும் கிளைகள் பரப்பி நிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-ஆவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாகச் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக, நம் எம்.ஜி.ஆர். அவர்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை 17.10.1972 அன்று தோற்றுவித்தார்.
கட்சி தொடங்கிய ஆறே மாதங்களில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டப்பட்டது. அதன் பின்னர் 1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தமிழ் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். தமிழ் நாட்டின் அரசியல் தலைவிதியே தலைகீழாக மாறி, தி.மு.க. முகவரி இழந்து அடையாளம் தெரியாமல் போனது.
மூன்று முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலங்களில் தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏழை, எளியவர்களுக்காக எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முத்தான திட்டங்கள்தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை கண்ணின் இமை போல் பாதுகாத்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி அளப்பரிய சாதனைகளைப் புரிந்து `அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் நாட்டை பீடுநடை போடச் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள், வேதனைகள், சதிகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் என எது வந்த போதிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்கிற நம் இருபெரும் தெய்வங்களின் நல்லாசியோடும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் துணையோடும், கழகத்தை மீட்டு, இன்றைக்கு வீறுநடை போடச் செய்து கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா, எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என சட்டமன்றத்தில் சூளுரைத்தபடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த இனிய நேரத்தில், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக தங்கள் இன்னுயிரைத் தந்த தியாக சீலர்களை நன்றியோடு நினைவுகூருவது எனது கடமையெனக் கருதுகிறேன்.
கடந்த நான்கரை ஆண்டுகால விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என பல்வேறு விலைவாசி உயர்வுகளால், தமிழக மக்கள் தலையில் வரிச் சுமைகளை சுமத்தி, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது இந்த விடியா திமுக அரசு.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கள்ளச் சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசோ, மக்களைக் காப்பாற்றாமல், அவர்களைப் புதை குழியில் தள்ளிவிட்டு, தங்கள் குடும்பம் செழிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. வருகின்ற 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், கழகத்தின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன். கழகம் 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள இந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி; அல்லும் பகலும் கண்துஞ்சாது களப் பணியாற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்திட இந்த இனிய நன்னாளில், நாம் அனைவரும் உளமார உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b