அமெரிக்காவிடம் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக முயற்சி - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி , 16 அக்டோபர் (ஹி.ச.) ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்ந
அமெரிக்காவிடம் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக முயற்சி - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்


புதுடெல்லி , 16 அக்டோபர் (ஹி.ச.)

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் கருத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் இன்று (அக் 16) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

நிலையான எண்ணெய் விலை, பாதுகாப்பான விநியோகம் ஆகியவையே இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது.

தற்போதைய நிர்வாகம், இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி இருக்கிறது.

இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b