மதுரை மேயர் ராஜினாமா எதிரொலி - நாளை மதுரை மாநகராட்சி அவசர கூட்டம்
மதுரை, 16 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேல் சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக 5 மண்டலம், 2 நிலைக் குழுத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் ராஜினாமா செய்தனர். மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்
மதுரை மேயர் ராஜினாமா எதிரொலி - நாளை மதுரை மாநகராட்சி அவசர கூட்டம்


மதுரை, 16 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேல் சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக 5 மண்டலம், 2 நிலைக் குழுத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் ராஜினாமா செய்தனர். மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப் பட்டனர்.

மதுரை மாநகராட்சி உதவி ஆணையர், பில் கலெக்டர்கள் என 16க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி மதுரை டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் மேலிடம் கடுமை காட்டாமல் தாமதித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று (அக் 15) இரவு திடீரென்று மேயர் பதவியில் இருந்து இந்திராணி விலகினார். இதற்காக மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனை சந்தித்தார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை கமிஷனர் பெற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நாளை (அக்.17) துணைமேயர் தலைமையில் மாநகராட்சி அவசர கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திராணியின் ராஜினாமா ஏற்கப் பட்டுள்ளது உறுதியானது.

நாளை நடைபெறும் அவசரக் கூட்டத்தில் மேயர் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.யார் புதிய மேயர் இதற்கிடையே புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b