சிபிசிஐடி விசாரணையின் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை, 16 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாநகர் கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது மகன் முத்து கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய காவல்துறையினர் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில்
Madurai High Court


மதுரை, 16 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாநகர் கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது மகன் முத்து கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய காவல்துறையினர் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 24 ஆம் தேதியன்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் பெற்றோர் அளித்த புகாரில்,

காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் காவலர்களான ரவிச்சந்திரன், சதீஸ்குமார் ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கானது மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.

அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ்(50) மற்றும் காவலர்களான ரா.ரவிச்சந்திரன் (56), ச.ரவிச்சந்திரன் (50), சதீஸ்குமார் (33) ஆகிய நால்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நால்வருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும. விதி்த்து உத்தரவிட்டார்.

இதேபோன்று இந்த வழக்கில் புலன் விசாரணையை முறையாகச் செய்யாத விசாரணை கண்காணிப்பாளராக பணிபுரிந்த SP ராஜேஸ்வரி (ராஜேஸ்வரி தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) உறுப்பினர் செயலாளரும் (Armed POLICE) காவல்துறை ஐஜியாகவும் பதவியில் இருந்து வருகிறார்) மீதும், உடல் கூறாய்வு செய்யாத மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கு எதிரிகளுக்கு உடந்தையாக இருந்து உதவி செய்த எஸ்.எஸ்.காலணி காவல்நிலைய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த கண்ணன், பிரேம்சந்திரன் ஆய்வாளராக பணிபுரிந்த அருணாச்சலம், ஆகிய மூவரையும் வழக்கில் கூடுதலாக இணைத்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் சிபிசிஐடி காவல்துறைக்கு நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.

இந்த மேல்விசாரணை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல் முறையீடு மனு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, ஆஜரானார்.

தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா

வாதிடுகையில்,

தவறு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள தண்டனை வரவேற்கத்தக்கது. அதேபோன்று காவல்துறை அதிகாரிகள் செய்த குற்றத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய புலன் விசாரணை செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தந்திருப்பதும் பாராட்டத்தக்கது. மேலும் இது போன்ற தண்டனை தீர்ப்புகள் கஸ்டடி டெத் உள்ளிட்ட காவல் துறையினரின் சட்டத்திற்கு புறம்பான எல்லை மீறல் நடவடிக்கைகளை தடுக்க வழிவகை செய்யும்.

ஆனால் குற்றத்தை மறைக்க உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் வாயிலாக தெரிய வருகிற பட்சத்தில் அவர்களை அப்போதே குற்றவாளிகளாக சேர்த்து விசாரித்து இருக்க வேண்டும் மாறாக தண்டனை வழங்கப்பட்ட பிறகு மீண்டும் அதே வழக்கில் மேல்விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

அதேபோன்று மேல்விசாரணை செய்ய புலன் விசாரணை அதிகாரியை டிஜிபி நியமிக்க வேண்டும், அந்த மேல்விசாரணை முடியும் வரை காவல்துறை ஆய்வாளர் அருணாச்சலத்தை இடைக்கால பணிநீக்கம் செய்ய வேண்டும், புலன் விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் சட்டப்படி பிறப்பிக்க முடியாது. அதுபோன்ற உத்தரவுகளை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க முடியும் என முன் தீர்ப்புகளை காட்டி விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதி இளைஞர் மரண வழக்கில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய வேண்டும், காவல்துறை ஆய்வாளர் அருணாச்சலம் தற்காலில பணியிடை நீக்கம், ராஜேஷ்வரி மற்றும்.மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கை என்கிற விசாரணையின் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Hindusthan Samachar / ANANDHAN