அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறிய முதியவரால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி, 16 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முதலூர் கிராமம். இந்த பகுதியில் வசிப்பவர் கல்வராயன் என்பவரது மகன் ஆறுமுகம்(56). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே முதலூர், ஆவி கொளப்பாக்கம் உள்ளிட்ட பகு
Mobile Tower


கள்ளக்குறிச்சி, 16 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முதலூர் கிராமம். இந்த பகுதியில் வசிப்பவர் கல்வராயன் என்பவரது மகன் ஆறுமுகம்(56).

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே முதலூர், ஆவி கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியிலிருந்து நீர் வரக்கூடிய வாய்க்கால் பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஏரி நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஏரியையும் நீர்நிலை ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் எனக் கூறி பல்வேறுமுறை அரசுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று திடீரென்று ஆவி கொளப்பாக்கம் பகுதியில் உள்ள செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி அமர்ந்த நபர் அங்கிருந்து கீழே வராமல் தர்ணாவில் ஈடுபட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர், போலீசார், தீயணைப்பு துறையினர் என பலரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழே இறங்கி வராமல், அரை மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் 26 கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருவேன் என கூறி அங்கேயே அமர்ந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN