Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி,16 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 'கோல்ட்ரிப்' என்னும் இருமல் மருந்து குடித்து, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது, நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலக சுகாதார நிறுவனமும், இந்த மருந்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தரமற்ற மருந்தால், 1 - 6 வயது வரையிலான குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் குவிந்தன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தலைமையில், சுகாதார அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில், டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் மற்றும் சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதனங்கள், 2025' சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வரைவு அறிக்கையை, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ராஜிவ் ரகுவன்ஷி கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நம் நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் தரமற்ற நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த பிரச்னையை தீர்க்க, ஏற்கனவே அமலில் உள்ள மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் சட்டம், 1940ல், சர்வதேச அளவில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து நடக்கவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், அதை அறிமுகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டதும், உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்காக இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், கடுமையான தரச் சோதனைகள் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.
தரமற்ற பொருட்களுக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகளுக்கு உரிமை வழங்கப்படும்.
போலி அல்லது தரமற்ற மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படும்.
உரிமம் வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குதல், மாநில அளவிலான கட்டுப்பாட்டாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சோதனை ஆய்வகத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற செயல்களை விரைவாக மேற்கொள்ள இந்த சட்டம் உதவும்.
உற்பத்தி முதல் சந்தை வினியோகம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM