Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 16 அக்டோபர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள அதிகரட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை கடந்த ஒரு மாதத்திற்கு முன் நிறுத்தப்பட்டு வேறு இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படக்கூடிய அரசு பேருந்து சேவை இல்லாததால் உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்கு செல்வோர், அத்தியாவசியம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளுக்காக மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லக்கூடிய அவல நிலையானது ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கள் கிராமப் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தை முறையாக இயக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், உதகை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் கிராம மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து இன்று அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த படுகரின மக்கள் பள்ளி மாணவர்கள், பெண்களுடன் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி தங்கள் கிராமப் பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்தை சிறை பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கிராம பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்த்துறையினர் கிராம பகுதியில் குவிந்துள்ளனர்.
போராட்டம் காரணமாக இன்று காலை முதல் இக்கிராமம் வழியாக இயக்கப்படும் இரண்டு பேருந்துகள் தகவல் அறிந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கொட்டும் மழையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN