Enter your Email Address to subscribe to our newsletters
திருவனந்தபுரம், 16 அக்டோபர் (ஹி.ச.)
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்.
இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார்,
பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
பின்னர் மறுநாள்
(22-ந் தேதி) வர்க்கலாவில் நாராயண குரு ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார்.
தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM