Enter your Email Address to subscribe to our newsletters
ஆந்திர, 16 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றார். ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். அங்கு சென்று பிரதமர் மோடி ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபட்டார்.
அவருடன் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பிறகு சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அதனை தொடர்ந்து கர்னூல் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ.13,340 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதன்படி தொழில்துறை, மின்சாரம், சாலைகள், ரெயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
குறிப்பாக கர்னூல்-III துணை மின் நிலையத்தில் ரூ.2,880 கோடி முதலீட்டில் மின்பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதே போல், ரூ.4,920 கோடி முதலீட்டில் கர்னூலில் ஓர்வக்கல் தொழிற்பேட்டை மற்றும் கடப்பாவில் கொப்பர்த்தி தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ரூ.960 கோடி செலவில் சப்பாவரம்-ஷீலாநகர் வரையிலான 6 வழி பசுமை நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், ரூ.360 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா மாவட்டத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம், ரூ.1,730 கோடி செலவில் கெயில் இந்தியா லிமிடெட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாகுளம்-அங்குல் இயற்கை எரிவாயு குழாய் பாதை மற்றும் ரூ.1,200 கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
Hindusthan Samachar / Durai.J