Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படவுள்ளது. 20 ஆம் தேதி திங்கள் கிழமை வருவதால் சனி, ஞாயிறு சேர்த்து மூன்று நாள் விடுமுறையாக உள்ளது.
பலரும் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகள், ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (அக் 16) முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அவை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம். மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும்.
இப்பேருந்துகளின் விவரம் குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன் 5900 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களும் சேர்த்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதே போல, பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அது போல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 16.10. 2025 முதல் 19.10.2025 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 19.10.2025 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16.10.2025, 17.10.2025 மற்றும் 18.10.2025 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b