Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 16 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் வெங்கடேசன், மனைவி கௌரி ஆகியோர் செங்கல் சூளைகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு கிஷோர் (வயது 5), தேவேஷ் (வயது 4) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
வெங்கடேசன் அடிக்கடி மதுவில் மயங்கி வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் உறவினர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து இறப்பு நிகழ்வில் பங்கேற்ற வெங்கடேசன், வீட்டிற்கு திரும்பும் வழியிலேயே மீண்டும் மது அருந்தியுள்ளார்.
இதனை தட்டி கேட்ட மனைவி கௌரியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனம் உடைந்த கௌரி, தனது இரு குழந்தைகளுடன் அருகிலுள்ள விவசாய நிலத்தில் உள்ள ஆழமான கிணற்றுக்குச் சென்று தன் செல்போனையும் கால்நடைகளையும் அருகே வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நீரில் பாய்ந்துள்ளார்.
தகவல் அறிந்த செங்கம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட முயற்சிக்குப் பிறகு மூன்று உடல்களையும் மீட்டனர்.
பின்னர் சடலங்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN