திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா ரயில் இன்று முதல் ராமேசுவரம் வரை நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச) மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (அக் 16) முதல் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்க
திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா ரயில் இன்று முதல் ராமேசுவரம் வரை நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)

மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (அக் 16) முதல் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயிலை பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய ரெயில்வே வாரியம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒப்புதல் கொடுத்தது.

அதனை தொடர்ந்து, இன்று (அக் 16) முதல் இந்த ரெயில் உரிய நேர மாற்றங்களுடன் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.

ராமேசுவரத்தில் இருந்து இந்த ரெயில் நாளை (அக் 17) முதல் மதுரை வழியாக திருவனந்தபுரம் செல்லும். இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையமும், காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடைகிறது.

மானாமதுரைக்கு காலை 10.30 மணிக்கும், பரமக்குடியில் இருந்து காலை 10.52 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து பகல் 11.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.13 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையமும், மதியம் 2.38 மணிக்கு பரமக்குடிக்கும், மாலை 3.05 மணிக்கு மானாமதுரைக்கும், மாலை 4.05 மணிக்கு மதுரைக்கும் வந்தடைகிறது.

மாலை 5.10 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. இந்த ரெயிலில், ஒரு முதல் வகுப்புடன் கூடிய 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b