Enter your Email Address to subscribe to our newsletters
திருச்சி, 16 அக்டோபர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கலிங்கமுடையான் பட்டி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இது நாள் வரை தினசரி கூலியாக ரூபாய் 270 வழங்கப்பட்டு வந்தது.
இதனை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இளங்கதிர் என்பவர், 100 நாள் பணியாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூபாய் 60 மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்ததோடு, பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வரும் பெண்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பளப் பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண்களை அவமரியாதையாக பேசியது தொடர்பாக புகார் மனு அளிக்கப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN