Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தாரே...புறநானூறு சொல்லும் புறக்கணிக்கப்பட முடியாத உண்மை.
உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம்.
உற்பத்தியைப் பெருக்கத் தெரியாமல், நிலங்களை முழுமையாய் பயன்படுத்த அறியாமல் இருந்த சமூகங்களின் வளர்ச்சியில், உணவின் தேவைக்காக நாடுகள் அனைத்திலும் நடந்த போர்களின் செய்திகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்து கிடக்கின்றன.
ஆனால் இன்று அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் விவசாயத்தில் எத்தனை எத்தனை முன்னேற்றங்கள் இருந்தபோதும் வறுமை, பஞ்சம், உணவுப் பற்றாக் குறை ஏன் இருக்கின்றன? அன்றாடம் அன்னத்திற்கு அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதின் காரணம்?
இந்த கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டியது மிக மிக அத்தியாவசியமானது.
இதன் காரணமாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இன்று ஆண்டுதோறும் உலக உணவு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் என இன்று நடைபெறுவது வழக்கம்.
1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தொடங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஐ.நா. இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20ஆவது உலக மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
தற்போது காணப்படும் எரிசக்திப் பிரச்னைகளைப்போல் 2050ல் தோன்றும் உணவுப் பிரச்னை, அரசியலை நிலையற்றதாக மாற்றிவிடும் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை.
இந்த நூற்றாண்டின் மத்திக்குள் மக்கள் தொகை 30 சதவிகிதம் அதிகரித்து 9 பில்லியனாக மாறும் என்பது மக்கள் தொகைக் கணக்கீட்டாளர்களின் மதிப்பீடு.
அதன்படி வரும் உணவுத் தேவைகளை சமாளிக்க 70 சதவிகித உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும். ஆனால் ஆண்டிற்காண்டு உணவு உற்பத்தியின் விழுக்காடு குறைந்துகொண்டே போகிறது.
மேலும், விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உடல் பருமன் போன்றவை ஒன்றுடன் ஒன்று இணைந்த விஷயங்கள் ஆகும். ஏற்கனவே உலகளவில் எட்டில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் 75 சதவிகிதத்தினர் நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் உணவு உற்பத்திக்கு கிடைக்கும் தொழில்நுட்ப, இயற்கை வளங்களின் கட்டுப்பாடுகள் உலகளாவிய உணவு உற்பத்தியையும் கட்டுப்படுத்தும். இதற்கான ஆய்வுகளில் செலவிடப்படும் தொகையும் குறைந்துள்ளது. மேலும் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களும் எளிய, சிறு விவசாயிகளைச் சென்றடைவதில்லை.
இந்த முறைகள் மாற்றப்பட்டு உணவுத் தேவைகளை சமாளிக்கும் புதிய நுட்பங்களும் கண்டறியப்படுதல் வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.
அதுதான் உண்மையான உலக உணவு தினமும் கூட!
Hindusthan Samachar / JANAKI RAM