கொரோனா காலத்திற்கு பின் அந்தமானில் சுற்றுலா பயணியர் வருகை 200 சதவீதம் அதிகரிப்பு - கவர்னர் டி.கே. ஜோஷி
போர்ட் பிளேர், 16 அக்டோபர் (ஹி.ச.) ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடந்த சுற்றுலா மாநாட்டில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை கவர்னர் டி.கே.ஜோஷி பங்கேற்று பேசியதாவது: கொரோனா காலத்தின் போது, நாடு முழுதும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை சரிந்தது. எனி
கொரோனா காலத்திற்கு பின் அந்தமானில் சுற்றுலா பயணியர் வருகை 200 சதவீதம் அதிகரிப்பு - கவர்னர் டி.கே. ஜோஷி


போர்ட் பிளேர், 16 அக்டோபர் (ஹி.ச.)

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடந்த சுற்றுலா மாநாட்டில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை கவர்னர் டி.கே.ஜோஷி பங்கேற்று பேசியதாவது:

கொரோனா காலத்தின் போது, நாடு முழுதும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை சரிந்தது. எனினும், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டபின் அதாவது, 2022ம் ஆண்டு முதல் இன்று வரை, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை 200 சதவீதமாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை 157 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகளை, 'ஸ்கூபா டைவிங்' மையமாக உயர்த்தும் நோக்கில் பட்டன் தீவு, பாரன் தீவு, ஸ்வராஜ் தீவு ஆகிய மூன்று இடங்களில் ஸ்கூபா டைவிங் மையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக, சுற்றுலா பயணியரை கவர்வதுடன், கின்னஸ் சாதனை படைக்கவும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் தயாராக உள்ளது.

இது தவிர, சுற்றுலா பயணியரை கவரும் நோக்கில் செல்லுலார் சிறை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு, வைப்பர் தீவு உட்பட தேசிய நினைவிடங்களை ஒருங்கிணைத்து பாரம்பரிய சுற்றுலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

இதே போல் சுற்றுச் சூழல் சார்ந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி, கிரேட் நிக்கோபார் மற்றும் போர்ட் பிளேரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட விமான நிலையங்கள், கப்பல் சுற்றுலா உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டமைத்தால் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக்க வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM