Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி,பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
தினமும் சராசரியாக 28 முதல் 34 (பயணிகளின் வருகையை பொருத்து) விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை மட்டுமின்றி சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கோவை விமான நிலையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தில் சரக்கு அனுப்புவதற்கான ‘புக்கிங்’ அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது,
உள்நாட்டு பிரிவில் வழக்கமாக மாதந்தோறும் 500 டன்னுக்கு கீழ் தான் சரக்குகள் கையாளப்படும். ஆனால் கடந்த மாதம் 547 டன்னாக அதிகரித்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு புக்கிங் அதிகரித்து உள்ளதால் இந்த மாதம் 625 டன்களுக்கு மேல் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு உள்ளன.
வழக்கமாக காய்கறி, உணவு பொருட்கள் அதிகம் கையாளப்படும் நிலையில், தற்போது இனிப்பு மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பலவகை பொருட்கள் அதிகம் கையாளப்படுகின்றன.
தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சரக்கு கையாளுகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan