மதுரை மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமாவிற்கு ஒப்புதல்
மதுரை, 17 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். அதன் ப
மதுரை மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமாவிற்கு ஒப்புதல்


மதுரை, 17 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுரை மேயராக பதவி வகித்து வந்த இந்திராணி தனது குடும்பச் சூழல் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடந்த 15ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் இன்று (அக் 17) நடைபெற்றது.

இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்ததற்கு மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 100 வார்டு கவுன்சிலர்களும் முழுமையாக மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b