Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பணி செய்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகிய 4 சகோதரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன், சகோதரி தவமணியின் கண்பார்வை பறிபோன பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எதிர்பாராத இயற்கை பாதிப்பில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் தலா 10 இலட்சம் இழப்பீடுஅறிவித்த திராவிட மாடல் திமுக அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில்
ஈடுபட்டிருந்தபோது, இயற்கை சீற்றத்தால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாயும், பார்வை இழந்தவருக்கு 25 லட்சமும் துயர்துடைப்பு நிதியாக வழங்கி, அவர்களின் குடும்பத்தை சூழ்ந்துள்ள துயரிலிருந்து மீள்வதற்கு உதவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ