Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இயங்கி வருகிறது.
இந்த மன்றத்தின் ஒரு அங்கமான காப்புரிமை தகவல் மையம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து காப்புரிமைகள், பதிப்புரிமைகள் வர்த்தக குறியீடுகள், தொழில்துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கு மாநில அளவிலான உதவிகளை வழங்குகிறது.
அந்த வகையில் ஒரு பொருளின் தரம், தனித்துவம் மற்றும் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படக்கூடிய புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த புவிசார் குறியீடு விவசாயம், இயற்கை, கைவினை, உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், தயாரிப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்கவும் புவிசார் குறியீடு முக்கியமாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறது.
இதில் தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலை பூண்டு, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய 4 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிலும் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல், கடந்த 7 மாதங்களில் அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 10 பொருட்களை அடையாளம் கண்டு அதற்கு புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்ய உதவியுள்ளது.
இந்த பட்டியலில், ஜவ்வாது புளி, வந்தவாசி கோரைப்பாய், கொல்லிமலை காபி, கொல்லிமலை பலாப்பழம், பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி, மதுரை அப்பளம், கீழக்கரை தொதல் அல்வா, மதுரை ஜிகர்தண்டா, கன்னியாகுமரி நன்னாரி ஆகியவை அடங்கும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM