கரூர் துயர சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிபிஐ குழுவினரிடம் ஒப்படைத்தது எஸ்.ஐ.டி
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்
கரூர் துயர சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிபிஐ குழுவினரிடம் ஒப்படைத்தது எஸ்.ஐ.டி.


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.

தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டு, அந்த குழுவானது தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும், சிபிஐ அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், விசாரணை நடத்த கரூர் வந்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர்.

பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் வந்துள்ளனர்.

கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளிடம் எஸ்ஐடி வசம் உள்ள ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இன்றோ அல்லது நாளையோ விசாரணையை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b