ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்க ஆணையம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆணவ படுகொலை தொடர்பாக சட்டசபை முதல்வர் ஸ்டாலின் பேசிய
ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்க ஆணையம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆணவ படுகொலை தொடர்பாக சட்டசபை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது. உலகம் அறிவு மயம் ஆகிறது. ஆனால் அன்பு மயம் ஆவதை தடுக்கிறது. சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது. ஆணவப் படுகொலைக்கு ஜாதி மட்டும் காரணம் இல்லை.

எதற்காக நடந்தாலும் கொலை, கொலை தான். அனைத்து வகையான ஆதிக்க மனோ பாவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூகங்களின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன்.

எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பிரசாரத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

சீர்திருத்தப் பிரசாரத்தையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.

சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.

அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆணவ படுகொலையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு உரிய சட்டம் இயற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b