Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டம், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தின் போது காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌதம் மற்றும் அவரது நண்பர்களை தவெகவைச் சேர்ந்தவர்கள், கருப்பு நிற காரில் வந்து சரமாரியாக தாக்கியதாகவும், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாகவும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌதம், கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
புகாரின் அடிப்படையில் அக்டோபர் 9 ஆம் தேதி தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து கைதான வெங்கடேசன் தரப்பில் ஜாமின் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இது பொய்யான குற்றச்சாட்டு. ஒரே வழக்கிற்கு இரண்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது சட்டப்படி செல்லாது. இரண்டு வழக்குகளிலும் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மாறி, மாறி உள்ளதாகவும் மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை துவக்க நிலையிலேயே உள்ளது. மேலும் மனுதாரரை விசாரித்தால் தான் உண்மை என தெரிய வரும். எனவே ஜாமின் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில், ஆஜான வழக்கறிஞர் மனுதாரர் மீது, பொய்யான வழக்கு பதியப்பட்டு உள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படத் தயார் எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீமதி மனுதாரருக்கு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்படுகிறது. தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், ஒரு வாரம் தினமும் காலை 10 மணிக்கு, நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN