Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 17 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் அயல்நாடுகளுக்கு பணி, கல்வி பயிலச் செல்பவர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் 15 நபர்களைக் கொண்டு கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டு கடந்த 24.12.2022 முதல் செயல்பட்டு வருகிறது.
அவ்வாரியம் மூலம் அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் உறுப்பினராக வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் 18 முதல் 55 வயதுடைய அயலகத் தமிழர்கள் கீழ்க்காணும் இரு பிரிவுகளில் வாரியத்தில் தங்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.
1. அயலகத் தமிழர் (வெளிநாடு) இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
2. அயலகத் தமிழர் (வெளிமாநிலம்): இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டையினைக் கொண்டு வாரியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் காப்பீட்டு திட்டங்களான விபத்து காப்பீடு, தீவிர & தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு (Critical illness), கல்வி உதவித்தொகை திட்டம் (Scholarship Scheme), திருமண உதவித்தொகை திட்டம் (Marriage Assistance Scheme), அயலக தமிழர் நல வாரியத்தின் இறந்த உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி, தமிழ்நாடு பன்னாட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் (TN Skill Internation), அயலகத் தமிழர் நல வாழ்வுக்கான மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட திட்டங்களில் அயலகத் தமிழர்கள் பயன்பெறலாம்.
அயலகத் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் இப்புகைப்பட அடையாள அட்டையினைக் கொண்டு மேற்கூறிய நலத்திட்டங்களோடு எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம்.
எனவே, இனிவரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு / கல்வி பயில செல்லும் தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்யவும், அயலகத் தமிழர்களுக்காக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்ல விரும்பும் தமிழர்கள், அவர்களுக்கு அருகில் உள்ள தமிழ்நாடு அரசின் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்களை அணுகி பயிற்சி பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
அயலகத் தமிழர் நல வாரிய அடையாள அட்டையினை பெறுவதற்கான இணைய வழி பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளும், விளக்கங்களும் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b