Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 17 அக்டோபர் (H.S.)
ஆன்மீக நகரமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சுற்றி உள்ள 18 கிராமங்களை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சியாக செயல்பட்டு வந்த பொழுது நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் இருந்து தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஈசானிய மைதானம் பின்புறம் அமைந்துள்ள குப்பை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டது.
குறிப்பாக திருவண்ணாமலை மாநகரப் பகுதியில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாநகரில் உள்ள வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சியின் சார்பில் தினந்தோறும் மக்கும் குப்பையாகவும் மக்காத குப்பையாகவும் பிரித்து பெறப்பட்டு திருவண்ணாமலை ஈசானிய திடலில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாநகராட்சியில் நடத்தப்படும் ஒவ்வொரு மாநகர மன்ற கூட்டத்தின் போதும் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் குப்பைகளை சரியாக அள்ளுவதில்லை என குற்றம் சாட்டி வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஒரு வார காலமாக திருவண்ணாமலை மாநகரில் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் ஆங்காங்கே சாலையில் கொட்டப்பட்டு மலை போல் தேங்கி கிடக்கின்றது.
மாநகரின் இதய பகுதியாக விளங்கும் சின்ன கடை வீதி, துர்க்கை அம்மன் கோவில் தெரு, தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி, ஆனைகட்டி வீதி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, ராஜகோபுரம், மண்டி தெரு, தென் ஒத்தவாடை வீதி, கிரிவலப் பாதை, மாடவீதி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொது மக்கள் சாலையில் கொட்டி செல்வதால் குப்பைகள் அனைத்தும் குப்பைத்தொட்டி முழுக்க நிரம்பி சாலையில் கொட்டி கிடக்கும் நிலை காணப்படுகிறது.
நாளுக்கு நாள் வரும் ஆன்மீக பக்தர்களின் அதிகரிப்பால் திருவண்ணாமலை மாநகரம் முழுக்க தற்பொழுது வீடுகளும் தங்கும் விடுதிகளாக மாறிவரும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் அனைத்து வகையான கழிவுகளையும் சாலையிலேயே கொட்டி செல்லும் நிலை இருப்பதால், மாடுகள் அதனை உண்பதற்காக வரும்பொழுது வாகன ஓட்டிகளுக்கு இடையே விபத்தில் ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.
பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் நடைபெற்ற நிலையில் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து வருகை தந்த கிரிவல பக்தர்கள் முகம் சுளித்தவாறு கிரிவலம் மேற்கொள்ளும் நிலையும் திருவண்ணாமலை நகரில் காணப்படுகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் குப்பை அள்ளுவதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளிக்கும் மாதத்திற்கு 15 நாட்கள் குப்பை அல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN