Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 1992 டிசம்பர் 22 -ல் ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
வறுமை என்பது வெறும் பணமில்லாத நிலை மட்டுமல்ல. இது உணவு, சுத்தமான நீர், உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளும், கண்ணியமான வாழ்வுக்குத் தேவையான மனித உரிமைகளும் மறுக்கப்படும் ஒரு நிலை.
இது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுத்து, சமூகத்தில் பாகுபாட்டையும், பின்தங்கிய நிலையையும் ஏற்படுத்துகிறது.
இன்றளவும், உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை, சமூகப் பாகுபாடுகள், நிறுவன ரீதியான பாரபட்சம் போன்ற பல்வேறு சவால்கள் உள்ளன.
வறுமை ஒழிப்புக்கான தீர்வுகள்
வறுமையை ஒழிக்க, உலக அளவிலும், தேசிய அளவிலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.
வறுமை ஒழிப்பு திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்துவதில் வறுமையில் வாழும் மக்களின் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுவது அவசியம்.
ஒவ்வொரு தனிமனிதருக்கும் கண்ணியமான வாழ்வுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இது கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் சாத்தியமாகும்.
வருமான உதவி, தரமான குழந்தை பராமரிப்பு, நல்ல வீடுகள் போன்ற குடும்பங்களை வலுப்படுத்தும் சேவைகளில் முதலீடு செய்வது வறுமையிலிருந்து மீண்டு வர உதவும்.
வளரும் நாடுகள் வறுமையை ஒழிப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் நிதி பெறுவதை எளிதாக்கும் வகையில் உலகளாவிய நிதி கட்டமைப்பை சீரமைக்க வேண்டும்.
இந்த ஆண்டின் கருப்பொருள் ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல் என்பதாகும்.
உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளி உள்ளதாகவும் தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிய ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், தற்போது தீவிர வறுமை அதிகரித்து வருகிறது, கொரோனா உலகில் உள்ள நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது என்று கூறி உள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM