Enter your Email Address to subscribe to our newsletters
சிர்ஹிந்த், 18 அக்டோபர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இன்று (அக் 18) காலை 7 மணி அளவில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது.
இதைக்கண்ட பயணி ஒருவர் உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் அலறி அடித்துக்கொண்டு இறங்கினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்களும், மீட்புக்குழுவினரும் எரிந்த பெட்டியை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரயிலின் 19வது பெட்டி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இந்த சம்பவத்தில், 18வது பெட்டியும் லேசான சேதம் அடைந்தது. உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
சம்பவம் பற்றி வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே இன்று (அக்.18) காலை 7.50 மணி அளவில் ரயில் எண்;12204 அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் பெட்டியில் தீப்பிடித்தது.
ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று, பயணிகளை வேறு பெட்டியில் ஏற்றி, தீயை கட்டுப்படுத்தினர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்த ரயில் அம்பாலாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு மாற்று பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b