Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்திய, டிரைவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கேட்டு கடந்த 13-ம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று(அக் 18) காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் விடுவிக்கப்பட்டார்.
தனது வழக்கறிஞர்களோடு வெளியே வந்த அவர் சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கிறேன். மற்றவைகள் குறித்து தலைமையில் இருந்து பேசுவார்கள் என்று கூறினார்.
இதுகுறித்து வழக்கறிஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் செல்வ பாரதி கூறியதாவது,
தவெக நிர்வாகிகளை அடக்க வேண்டும்; ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் ஜாமீனில் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த சம்பவத்தில் எவ்வளவு இழப்பீடு என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு சம்பவத்திற்கு இரண்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. பல்வேறு அழுத்தத்தின் காரணமாக பொய்யாக புனையப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துச் சொன்னோம்.
அதையடுத்து நீதிபதி எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று கூறி ஜாமீன் வழங்கினார். இவர் மீது தப்பில்லை என்பதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
ஒரு வாரத்திற்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b