ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்தின் தலைவரை நீக்க வேண்டும் - தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை
மதுரை, 18 அக்டோபர் (ஹி.ச.) சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சட்டம் இயற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என நேற்று நடந்த சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவ
கே என் பாட்ஷாகே என் பாட்ஷா


மதுரை, 18 அக்டோபர் (ஹி.ச.)

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சட்டம் இயற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என நேற்று நடந்த சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தலித் விடுதலை இயக்கம் அதன் தலைவராக உள்ள நீதிபதி கே என் பாஷாவை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா பேசியதாவது,

சாதி ஆணவ படுகொலையை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது, திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் கடந்த 4 ஆண்டுகளாக தலித் விடுதலை இயக்கம் முன்னெடுத்த தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இதற்காக பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராடியுள்ளன. ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் என்பது மறு பரிசீலனைக்குரியது. இவர் மற்ற வழக்குகளில் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடே பற்றி எரிந்த தருமபுரி சாதி மறுப்புத் திருமண இணையர்கள் இளவரசன், திவ்யா சம்பந்தப்பட்ட வழக்கில் நேர் எதிராகவும் சட்டவிரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நடந்துகொண்டவர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு தருமபுரியில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் திவ்யா இணையர்களை பிரிக்கும் நோக்கில் பாமக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பாலு தலைமையில் மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி மூலமாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில் தன் மகளை மீட்டுத் தருமாறும் இளவரசன் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார் என்றும் இளவரசன் திருமணம் செல்லாது வயது 21 ஆகவில்லை என்றும் ஆட்கொணர்வு மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கே. என்.பாஷா, தேவதாஸ் உள்ளிட்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

திவ்யாவும், இளவரசனும் ஆஜராகினர்.

யாரும் என்னை கடத்தவில்லை. நாங்கள் வாழ்கிறோம் என்று திவ்யா நீதிமன்றத்தில் நேரடி சாட்சியம் அளித்தார்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதோடு (HP) ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நீதிபதி கே. என். பாஷா, சாதிவெறி கும்பலின் கருத்துக்கு இசைவு தெரிவித்து அதே வழக்கில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் மீண்டும் தேவையின்றி வாய்தா நாள் குறித்து திட்டமிட்டு திவ்யாவை ஆஜராக வைத்து, திவ்யாவின் மனதை மாற்ற வாய்ப்புகள் கொடுத்தவர்தான் கே.என்.பாஷா.

இறுதியில் வழக்கின் வழியாகவே திவ்யா, இளவரசனோடு வாழ விரும்பவில்லை என்று அறிவிக்க வைத்தனர்.

அதோடு ஜூலை 1 அன்று, திவ்யா தன் தாயிடம் செல்வதாக அறிவித்த பின் தானாக வழக்கை முடித்தார் நீதிபதி. அதன் பின் ஜூலை 4 அன்று இளவரசன் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார்.

ஆக காதலரை பிரிப்பதற்கும். இளவரசன் சாதி ஆணவக் கொலைக்கும் துணையாக நின்றவர் நீதிபதி கே. என். பாஷா. நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதி சாதிய அநீதிக்கு துணைபோனார் என்பதே இவ்வழக்கின் சாட்சி.

ஆகவே அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதியை மீறி சட்டத்தின் படி தீர்ப்பு வழங்காமல் சட்டப்படி இணையர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், சாதிய கும்பலுக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்பதன் அடிப்படையில் இவர் தமிழக அரசு அமைக்க உள்ள ஆணையத்திற்கு பொருத்தமானவர் இல்லை என்று கருதுகிறோம்.

முன்னாள் நீதிபதி கே. என் பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பது திமுகஅரசு முன்னெடுக்கும் ஆணவக்கொலை குற்றங்கள் தடுப்புச் சட்டத்திற்கே நேர்மாறாகவும், தலித் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் சட்டத்தின் கூறுகள் அமைந்துவிடும் என்று கருதுகிறோம்.

தமிழக அரசு உடனடியாக நீதிபதி கே.என்.பாஷாவை மாற்றிட வேண்டும். மாற்றாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் அவர்களை நியமித்திடவேண்டும் என கூறியுள்ளார்.

Hindusthan Samachar / Durai.J