Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு, ரூ.34.9 லட்சம் மதிப்பில் பெரம்பூர் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை இன்று (அக் 18) திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நிதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கும், கல்விக்கும், மழலைச் செல்வங்கள் பயன்பெறுகின்ற வகையில் இந்த குழந்தைகள் மையங்களுக்கும் பெருமளவிற்கு மக்கள் பயன்பாட்டிற்கு இந்த இந்த நிதிகள் பயன்படுத்தப்பட்டு, இன்று இந்த குழந்தைகள் மையக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, இங்குள்ள குழந்தைகளுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் முடிவுறும் நிலையில் உள்ளது. மாமல்லபுரத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டில் ரூ.200 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு பேருந்து
நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் தைத்திங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமில்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 13 MTC பேருந்து நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அம்பத்தூர், முல்லை நகர், உதயசூரியன் நகர் ஆகிய 3 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு, இந்த மாத
(அக்டோபர்) இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். இதில் அம்பத்தூர் பேருந்து நிலையம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது புனரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகும். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்
Hindusthan Samachar / vidya.b