Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (அக் 18) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு!
நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.
மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
எனவே, டெல்டாக்காரன் என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b