Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 18 அக்டோபர் (ஹி.ச.)
நெல்லையில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
அதேபோல் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனிடையே மழை வடிநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் பல இடங்களில் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நெல்லை டவுண் மற்றும் சந்திப்பு சிந்து பூந்துறை பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. இந்த நிலையில் நேற்றும் மழை தொடந்து பெய்ய தொடங்கியது.
இதைத்தொடர்ந்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள குறிச்சி மருதுபாண்டியர் 1-வது தெருவில் வசித்து வரும் தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) என்பவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாடத்தியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN