Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பதி, 18 அக்டோபர் (ஹி.ச.)
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.
எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
ஜனவரி (2026) மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்தச் சேவை டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். 21-ந் தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணி வரை தொகை செலுத்தியவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை போன்றவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
உற்சவள் சேவைகள் மற்றும் அதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான (ரூ.300 கட்டண டிக்கெட்) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் தொடர்பான ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் தங்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம்.
இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b