Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 18 அக்டோபர் (ஹி.ச.)
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகில், ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததி நகர் என மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களும் உள்ளன.
இவ்விடத்தில் ரெஸ்டோபார் திறப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று(அக் 18) அந்த ரெஸ்டோபாரின் எதிர்புறத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு சம்பவ இடத்துக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்தது.
தகவலறிந்த தாசில்தார் ராஜேஷ் கண்ணா, உருளையன்பேட்டை போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேசிய தாசில்தார் ராஜேஷ்கண்ணா, உடனடியாக ரெஸ்டோபார் திறக்கப்படாது. உயர்அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b