Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.)
அரியானாவின் அம்பாலாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதியை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடியை பறித்துக்கொண்டனர்.
இந்த கைதுக்காக போலியான கோர்ட்டு உத்தரவுகளையும் அவர்கள் அந்த தம்பதிக்கு அனுப்பி அவர்களை நம்ப வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலி கோர்ட்டு உத்தரவுகளை வழங்கி தங்களை நம்ப வைத்து மோசடி செய்ததாக அந்த வயதான பெண் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதினார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடியை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன் வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது.
நீதிபதிகள் சூர்யா கந்த், ஜோய்மால்யா பாக்சி ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
இந்த வழக்கு, விசாரணையை விரைவுபடுத்தி வழக்கை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்லுமாறு போலீசாரிடம் கேட்டிருக்கக்கூடிய ஒரு சாதாரண குற்றமல்ல. மாறாக, குற்றவியல் முயற்சியின் முழு அளவையும் வெளிக்கொணர மத்திய மற்றும் மாநில போலீசாருக்கு இடையே ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் ஒரு விஷயம்.
நாடு முழுவதும் இது போன்ற டிஜிட்டல் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கோர்ட்டுகளின் பெயர், முத்திரை மற்றும் நீதித்துறை உத்தரவுகளை மோசடியாகப் பயன்படுத்துவதும், குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதும் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோார்ட்டு உத்தரவுகள், நீதிபதிகளின் கையெழுத்துகள் மூலம் அப்பாவி மக்களை கைது செய்வது நீதித்துறை நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின் அடித்தளத்தையே தாக்குகிறது. இது போன்ற கடுமையான குற்றச் செயலை மோசடி அல்லது சைபர் குற்றமாக சாதாரணமாகவோ அல்லது தனிமையாகவோ கருத முடியாது.
இவ்வாறு கூறிய நீதிபதிகள் பின்னர்,
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM