Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூரு,18 அக்டோபர் (ஹி.ச.)
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில், போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்னை.
பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கூட, போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
பல்வேறு பிரச்னை பெங்களூரையும், போக்குவரத்து நெரிசலையும் பிரிக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம். இந்த பிரச்னையால் பல ஐ.டி., நிறுவனங்களும் வேறு மாநிலங்களுக்கு இடம் மாறப்போவதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 'ரிங் ரோடு' எனப்படும், புற சுற்றுச்சாலை திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது.
எனினும், பல்வேறு பிரச்னைகளால் இத்திட்டம் கைவிடப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இத்திட்டத்தின் பெயர், 'பெங்களூரு வர்த்தக வழித்தடத் திட்டம்' என மாற்றப்பட்டது.
முதல்வர் சித்தராமையா தலைமையில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், 117 கி.மீ., துாரமுள்ள பெங்களூரு வர்த்தக வழித்தடத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை, 40 சதவீதம் வரை குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட உ ள்ள இத்திட்டத்தை, இரு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், ஆறு வழித்தட பிரதான சாலைகளுடன், இரு புறமும் இரு அணுகு சாலைகளை கொண்டிருக்கும். எதிர்கால மெட்ரோ ரயில் பாதைக்காக தனியாக இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 67 கிராமங்களில், 4,000 விவசாயிகளிடம் இருந்து மொத்தம், 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.
முதலில், 27,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, நிலத்திற்கு பதிலாக வேறு விதமான இழப்பீடுகளை விவசாயிகள் தேர்ந்தெடுப்பதால், 10,000 கோடி ரூபாயாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM