Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியத்தில் மீண்டும் உலகத் தரத்திலான சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் WTA 250 போட்டி நடைபெற உள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த சர்வதேச தரவரிசை கொண்ட சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பு, வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நடைபெற உள்ளது.
கடந்த சீசனின் வெற்றியாளரான செக் குடியரசின் 20 வயதான லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவுக்குபோட்டித் தரவரிசையில் முதலிடமும், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனியின் தாட்ஜானா மரியாவுக்கு2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2024ம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியவரும். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், உலகத் தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ளவருமான குரோஷியாவின் டோனா வெக்கிச், கடந்த ஆண்டு விம்பிள்டன் காலிறுதியை எட்டிய நியூசிலாந்தின் லுலு சன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மேலே உள்ள எழுச்சி நட்சத்திரங்களுடன் 19 வயதான நிகோலா பார்டுன்கோவா (செக் குடியரசு), 21 வயதான மரியா டிமோஃபீவா (ரஷ்யா), பார்போரா பாலிகோவா (செக் குடியரசு) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
2026-ம் ஆண்டு சீசனுக்குத் தயாராவதற்கு முக்கியமான தரவரிசைப் புள்ளிகளை பெறுவதற்காக 20 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கடுமையாகப் போட்டியிட உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு பதிப்பில் இரண்டாவது சுற்றை எட்டிய இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி நேரடியாக தகுதிச் சுற்றில் பங்கேற்கிறார்.
Hindusthan Samachar / P YUVARAJ