நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் மழையில் நினைந்த நெல்மணிகள் முளைப்பு
திருவாரூர், 18 அக்டோபர் (ஹி.ச.) கமலாபுரம், பேரையூர், பருத்தியூர், ஓவேல்குடி முதலான இடங்களில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்கொள்முதல் செய்யப்படாத நிலையில் மழையில் நினைந்த நெல்மணிகள் தற்போது முளைக்க தொடங்கியதால் வேதனையி
Paddy Harvesting


திருவாரூர், 18 அக்டோபர் (ஹி.ச.)

கமலாபுரம், பேரையூர், பருத்தியூர், ஓவேல்குடி முதலான இடங்களில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்கொள்முதல் செய்யப்படாத நிலையில் மழையில் நினைந்த நெல்மணிகள் தற்போது முளைக்க தொடங்கியதால் வேதனையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணிகள் சுமார் 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு 90 சதவீதத்திற்கு மேல் அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காக ஆங்காங்கே உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டாமல் ஒவவொரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திலும் 5000த்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதற்கு அடிப்படை காரணம் அரசு முறையாக கிடங்கு வசதியினை ஏற்படுத்தி தராத நிலையே இதற்கு மூலகாரணமாக இருந்துவருகிறது.

அரசின் இத்தகைய போக்கால் தற்போது விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனைக்காக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்தபோதிலும் இடவசதியின்மையால் கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கமலாபுரம், பேரையூர், பருத்தியூர், ஓவேல்குடி முதலான பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக காத்துகிடக்கும் நெல்மூட்டைகளை விவசாயிகள் தார்பாய் கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.

இருப்பினும் வடகிழக்கு பருவ மழை தற்சமயம் தொடங்கிய நிலையில் மிதமான மழை பெய்துவருவதால் நெல்மணிகள் மழையில் நினைந்து முளைக்க தொடங்கியுள்ளது.

நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் அத்தகைய நெல்லை அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யமுடியாத நிலை எழுந்துள்ளது. இருப்பினும் மழையால் பாதிப்புக்கு உள்ளான நெல்மணிகளை தற்போது சாலையில் கொட்டி அதனை காயவைக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த நேரத்திலும் மழை பெய்யக்கூடிய நிலை தற்போது எழுந்துள்ளதால் உடனடியாக அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் தேக்கம் இல்லாமல் அரசு விரைவாக நெல்மணிகளை கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN