Enter your Email Address to subscribe to our newsletters
விழுப்புரம், 18 அக்டோபர் (ஹி.ச.)
வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக ஒரே நேரத்தில் சாரை, சாரையாக படையெடுத்து செல்லும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சாரம், ஜக்காம்பேட்டை, முண்டியம்பாக்கம், அய்யங்கோயில்பட்டு, அரசூர் உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் உள்ள குறுகலான சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து மெல்ல ஊர்ந்தபடி மட்டுமே செல்கிறது.
இதேப்போல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் தங்கு தடையின்றி விரைவாக வாகனங்கள் செல்வதற்காக சுங்கச்சாவடியில் 3 கவுண்டர்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையே வாகனங்களால் நிரம்பி வழிந்து திக்கு முக்காடி வருகிறது. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி மட்டுமே செல்ல முடிவதால் பயண நேரம் அதிகரித்து வாகன ஓட்டிகளிடையே கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்தை சீர்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டாலும் கூட அதிகளவிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து வருவதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN