Enter your Email Address to subscribe to our newsletters
விழுப்புரம், 18 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விட்டு, விட்டு கன மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம், வானூர், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடந்த 3 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணை, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
வீடூர் அணையின் முமு கொள்ளளவான 32 அடியில் தற்போது 28 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 30 அடியை தண்ணீர் நெருங்கினால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெளியேற்றப்படும் சூழல் நிலவி வருகிறது.
இதனால் வீடூர் அணையின் நீர்மட்ட அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக வீடூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், எடையப்பட்டு, ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சில இடங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய் துறை அதிகாரிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN