Enter your Email Address to subscribe to our newsletters
அயோத்தி,18 அக்டோபர் (ஹி.ச.)
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், அயோத்தியின் மற்றொரு அடையாளமான ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தியின் சவுதா கோசி பரிக்ரமா பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த மெழுகு சிலை அருங்காட்சியகம், தென் மாநில கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது, 9,850 சதுர அடி பரப்பளவில், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை திறந்து வைக்க உள்ளார்.
இந்த அருங்காட்சியகத்தில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன், ஹனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின், 50 மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்த கேரள கலைஞர் சுனில் கூறுகையில்,
அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் திரேதா யுகத்தில் அடியெடுத்து வைப்பதை உணர்வர். புராணம், தொழில்நுட்பம், கலைத்திறனை ஒருங்கிணைக்கும் தனித்துவ இடமாக இது விளங்கும்.
என்றார்.
வண்ண ஒளி விளக்குகளுடன், '3டி' தொழில்நுட்ப காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முழுதும் குளிரூட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீ விபத்து தடுப்பு சாதனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு, 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 100 பேர் வரை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்த திட்டம் அயோத்தி நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது, அருங்காட்சியகத்தின் வருவாயில், 12 சதவீத நிதி, அயோத்தியின் வளர்ச்சிக்கு நேரடியாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM